என்னை கொன்றுவிடுவார்கள்.. அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோர முயன்ற பெண்!

சவுதி அரேபியாவில் இருந்து தப்பித்து அவுஸ்திரேலியாவுக்கு அகதி தஞ்சம் கோர முயன்ற பெண்ணை நாடு கடத்தும் முடிவை தாய்லாந்து அதிகாரிகள் கைவிட்டனர்.

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ரஹஃப் முகமது அல்குனம்( வயது 18) என்பவருக்கு, அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தார்களாம்.

மறுத்த காரணத்தால், அறைக்குள் அடைத்து வைத்து தலைமுடியை வெட்டி, அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குடும்பத்துடன் குவைத் சென்றிருந்த அவர், அங்கிருந்து தப்பி, அவுஸ்திரேலியா செல்ல முயன்றார். முதலில் தாய்லாந்து சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்ல அவர் முடிவு செய்திருந்தார்.

ஆனால், பாஸ்போர்ட்டை பரிசோதித்த குவைத் குடியுரிமை அதிகாரிகள், அதை பறிமுதல் செய்தனர். பெற்றோர் அனுமதி இல்லாமல், வெளிநாடு அனுப்ப மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து ஐ.நா.மனித உரிமை கண்கணிப்பு ஆணையத்துக்கு ரஹஃப், ட்விட்டரில் தகவல் தெரிவித்தார். பின்னர் எப்படியோ சமாளித்து விமானத்துக்குள் ஏறிவிட்டார்.

விமானம் தாய்லாந்து வந்தது. அவரது பாஸ்போர்ட்டை சோதித்த குடியுரிமை அதிகாரிகள், அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா உள்ளிட் ட ஆவணங்கள் இல்லாததை அடுத்து அவரை அனுப்ப மறுத்தனர். சவுதி தூதரகத்திடம் இதுபற்றி அறிவித்தனர்.

ரஹஃப் வீட்டில் இருந்து தப்பி வந்ததும் ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சம் கோர இருப்பதும் அப்போதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது.

இதனால் அவரை சவுதிக்கு மீண்டும் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது,

இதை ஏற்க மறுத்த ரஹஃப், நான் இஸ்லாம் மதத்தை துறந்துவிட்டேன். சவுதி சென்றதும் என்னை சிறையில் அடைப்பார்கள். அங்கிருந்து வெளியே வந்ததும் என்னைக் கொன்று விடுவார்கள் என்று கண்ணீர்விட்டு கதறியுள்ளார்.

இருப்பினும், தாய்லாந்து அதிகாரிகள் அவரை சவுதிக்கு நாடு கடத்தும் முடிவில் உறுதியாக இருந்தனர். இதுபற்றி மனித உரிமை கண்காணிப்பு அமைப்புக்கு ரஹப், உருக்கமாக ட்விட் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையத்திடம் தாய்லாந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள், ரஹஃப்பை ஏற்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து ரஹஃபை நாடு கடத்தும் முடிவை தாய்லாந்து அதிகாரிகள் கைவிட்டனர். அவரை ஓட்டல் ஒன்றில் தற்காலிகமாகத் தங்கவைத்துள்ளனர்.