4 பெண்களுடன் திருமணம்..! கோடிகளில் மோசடியில் ஈடுபட்ட நபர்!

இந்தியாவில் மனைவியை ஏமாற்றிவிட்டு தலைமறைவான கணவன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்தவர் பூஜா. இவர் ஓன்லைன் திருமண தகவல் மையம் மூலம் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த அகிலேஷ் குஜர் என்பவரை சந்தித்துள்ளார்.

தான் ஒரு ராணுவ அதிகாரி என அகிலேஷ் தெரிவித்த நிலையில் இருவரும் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து பூஜா கர்ப்பமானார். ஆனால் அவருக்கே தெரியாமல் கர்ப்பத்தை கலைக்கும் மாத்திரையை அகிலேஷ் கொடுத்த நிலையில் கர்ப்பம் கலைந்தது.

பின்னர் இரண்டாம் முறையும் பூஜா கர்ப்பமான நிலையில் அவரை வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை அகிலேஷ் கலைக்க வைத்தார்.

இதனிடையில் 4 வங்கிகளில் மனைவி பெயரில் ரூ.60 லட்சம் வரை லோன் வாங்கிய அகிலேஷ், மனைவியின் நகைகளை வாங்கி கொண்டு மாயமாகியுள்ளார்.

இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூஜா பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த அகிலேஷை பொலிசார் கைது செய்தனர்.

அகிலேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ராணுவத்தில் பணிபுரிவதாக கூறியது பொய் என தெரிந்தது.

இதே போல நான்கு பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்ததும், அவர்களை கருக்கலைப்பு செய்யவைத்து பின்னர் அவர்களிடம் இருந்தும் பணத்தை ஏமாற்றி வாங்கி சென்றதும் தெரியவந்துள்ளது.

மேலும் அகேலேஷுக்கு 7 வயதில் ஒரு மகன் இருப்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.