இச்சைகளுக்கு இணங்க மறுத்த பெண்கள் – ஆட்சியர் அலுவலகத்திலேயே அரங்கேறிய அட்டூழியம்.!

பாலியல் புகாரில் ஒருதலைபட்சமாக செயல்படும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பி.சதீஷ்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாகம்-பேரிடர் மேலாண்மை மாநில ஆணையர் டாக்டர்.கே.சத்யகோபால் ஆகியோருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் திருப்பதிஎன்பவர், அந்த அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிய கணவனால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளி இளம்பெண் எம்.சரண்யா மற்றும் விதவைப் பெண் கே.புவனேஷ்வரி ஆகியோருக்கு கடந்த சில மாதங்களாக பல்வேறு விதங்களில் தொடர்ந்து பாலியல் தொல்லைகொடுத்து வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இரு பெண்களும் திருப்பதியின் இச்சைகளுக்கு இணங்க மறுத்ததால், அவர்களை தற்காலிக பணியிலிருந்து நிறுத்துவேன் என தொடர்ந்து பல முறைமிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில்இரு பெண்களும் தைரியமாக திருப்பதியின் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய முயன்றதால், மாவட்ட நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த புகார் குறித்த விசாரணையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருப்பதியை பாதுகாக்கும் விதமாக, ஒருதலைப்பட்சமாகவும் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும் செயல்பட்டுள்ளார் என்பது, எமது சங்கம் நடத்திய விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

பணியிடங்களில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க பணியிடத்திற்கு வெளியே உள்ள சுயேட்சையான நபரையும் உள்ளடக்கிய விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படை விதி மீறப்பட்டுள்ளது.

“பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஒரு அரசு ஊழியரை, அரசுஊழியர்கள் மட்டுமே உள்ளடக்கிய” இரு குழுக்கள் பெயரளவுக்கு இருமுறை விசாரித்ததாகக் கூறியும், பாலியல் குற்றம் எதுவும் நடக்கவில்லை என அறிக்கைகள் தயாரித்து மாவட்டஆட்சியரும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து குற்றத்தை மறைக்க முயன்றுள்ளனர் என்பது தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்டஆட்சியர் ஷில்பா பி. சதீஷ் உத்தரவின்மூலம் நடைபெற்ற ஒருதலைபட்சமான விசாரணை அறிக்கைகளை நிராகரிக்க வேண்டும். சுயேட்சையான பெண்ணுரிமை ஆர்வலர் ஒருவரையும் உள்ளடக்கிய குழுவை அமைத்து மீண்டும் இந்த பாலியல் புகாரை விசாரக்க வேண்டும்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான 2013 ஆம் ஆண்டு சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பி. சதீஷ் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.