கும்பகோணம் அருகேயுள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி
மும்தாஜ்பேகம். இந்த தம்பதியினருக்கு முன்தசீர் என்ற 19 வயது மகன் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
மேலும் சாகுல்ஹமீது வெளிநாட்டில் இருப்பதால் முன்தசீர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று மாலை வெளியே சென்று வருவதாக கூறி சென்ற முன்தசீர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனை தொடர்ந்து நள்ளிரவில் அவரது செல்போனில் இருந்து அவரது தாய் மும்தாஜ்க்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அவர் உங்கள் மகனை நாங்கள் கடத்தியுள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் பணம் கொடுங்கள் என்று மிரட்டியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மும்தாஜ்பேகம் உடனடியாக தனது உறவினர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்று, போலீசாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் போலீசார் போன்கால் எங்கிருந்து வந்தது என்பதை ஆய்வு செய்து முன்தசீரை தேடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையோரம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முன்தசீர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது தாய், உறவினர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
மேலும் தனது மகனின் உடலை கண்ட மும்தாஜ் பேகம் கதறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






