நள்ளிரவில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..? துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. பீதியில் பொதுமக்கள்.!

சென்னை கீழ்பாக்கம் பகுதியில் திடீரென்று வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.

சென்னை கீழ்பாக்கம் அருகே உள்ள குட்டியப்பா நகர் பம்பிங் லேன் பகுதியில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளது. இந்த வருடம் சென்னையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. குறிப்பாக நேற்று மழைக்கான அறிகுறியும் தென்படவில்லை.

இருந்தாலும் அப்பகுதியில் வெள்ளம் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. அருகில் நீர் நிலைகள் எதுவும் இல்லாததால் கரை உடைந்து நீர் வெளியேறி இருக்கக்கூடும் என்ற அச்சமும் இல்லை.

ஆனால் எப்படி வீடுகளை சுற்றி இவ்வளவு நீர் தேங்குகிறது என்று தெரியாமல் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.

இரவு நேரம் என்பதால், கழிவு நீர் கால்வாய்க்கும், சாலைக்கும் வித்தியாசம் தெரியாமல் வீதிகளில் நடப்பதற்கே பயந்துகொண்டு சென்று, என்ன நடந்தது என்பதை கவனிக்க தொடங்கினர்.

இந்த நிலையில், குடிநீர் பகிர்மான நிலையத்திற்கு செல்லும் குழாய் ஒன்று நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அந்த பகுதியில் உள்ள சாலையில் ஆறு போல் ஓடியது தெரிய வந்துள்ளது.

இதனால் திடீரென வீடுகளுக்குள்ளும் வெள்ளம் போல் தண்ணீர் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த குடிநீர் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து குழாய் அடைப்பை சரிசெய்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழை இல்லா நேரத்தில் திடீரென வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது அப்பகுதி மக்களிடத்தில் பீதியை உண்டாக்கியுள்ளது.