உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் சந்தவுலி மாவட்டத்தில் உள்ள இலியா கிராமத்தில் இருக்கும் சாலையோரத்தில் குடிசைகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடிசைகளில் இருக்கும் மக்கள் நேற்று இரவு அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தனர்.
அந்த வேலையில் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கால்நடைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அங்குள்ள குடிசைப்பகுதிக்கு அருகில் வந்த லாரியானது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள குடிசைப்பகுதியில் புகுந்தது.
இந்த விபத்தில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை கண்ட அங்குள்ள மக்கள் சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கும் அவசர ஊர்தியினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., லாரியின் ஓட்டுநர் வாகனத்தை அதிவேகத்தில் இயக்கியதே விபத்திற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.






