தமிழகத்தில் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் திருவாரூர் தொகுதியில் கலைஞர் மறைவு, திருப்பரங்குன்றத்தில் எம்எல்ஏ போஸ் மறைவு, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தினால் 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் காலியாக இருக்கின்றது.
இந்த தொகுதிகளுக்கு எப்பொழுது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்து கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன் வழக்கு தொடர்ந்து உள்ளதால் அங்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாத சூழல் உள்ளது.
திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7-ந் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் அந்த தொகுதிக்கு மட்டும் தற்பொழுது இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்கி 10 ஆம் தேதி வரை பெறப்படுகிறது. வேட்புமனு பரிசீலனை ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுவை திரும்பப்பெற ஜனவரி 14 ஆம் தேதி இறுதி நாளாகும். இன்று முதலே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருகின்றது. ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும், ஜனவரி 31ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தல் நடத்தை விதிகளால் திருவாரூர் தொகுதி மக்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட வேண்டிய பொங்கல் பரிசுகளான இரண்டடி கரும்பு, ஒரு கிலோ அரிசி பை கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் திருமங்கலம், ஆர்கே நகர் பார்முலாக்கள் அங்கே அமலுக்கு வரும் என்பதால் திருவாரூர் மக்களுக்கு இது செழிப்பான பொங்கலாக அமையும் என சமூக வலைதளங்களில் பேச்சு எழ ஆரம்பித்துவிட்டது. கஜா புயலினால் பெருமளவில் பாதிக்கபட்ட அந்த மக்களுக்கு நிச்சயமாக இது செழிப்பான பொங்கல் தான்.