கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்: தற்கொலை முயற்சியால் வெளிவந்த உண்மை!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த ரத்தத்தை தானம் செய்த வாலிபர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விருதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அந்த வாலிபர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் என்பதும், இவர், 3 மாதங்களுக்கு ஒருமுறை, அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்வதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ரத்த தானம் செய்த அவர், வெளிநாட்டில் வேலை கிடைத்ததால்  கடந்த 4 மாதங்களுக்கு முன், மருத்துவ பரிசோதனை செய்ய ஆய்வகம் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிந்தது.

இதனையடுத்து உடனடியாக  அரசு மருத்துவமனைக்கு சென்று, தனது நிலைமையை கூறி தான் கொடுத்த ரத்தத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அதற்கு, அந்த ரத்தம், ரத்த வங்கி மூலமாக அனுப்பப்பட்டுவிட்டதாக, அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவருக்கு எச்ஐவி இருப்பதை, அந்த மருத்துவமனை ஆய்வக ஊழியர்கள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் அலட்சிய போக்கால் விபரீதம் ஏற்பட போகிறது என அந்த வாலிபர் அச்சத்துடன் இருந்தார்.

இந்நிலையில், அந்த வாலிபர் கொடுத்த ரத்தம், முறையாக பரிசோதிக்கப்படாமல் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதை அறிந்த வாலிபர், விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை, மீட்டஉறவினர்கள்  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.