சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியின் உரிமம் முறையாக புதுப்பிக்கப்பட்டள்ளதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு இரத்த வங்கி நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது.
இதேபோல் விருதுநகர் அரசு தலைமைமருத்துவமனையிலும் இரத்த வங்கி உள்ளது. மேலும் ஒரு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இரத்த வங்கிகள் வைத்துபராமரித்து வருகின்றனர். அரசு இரத்த வங்கிகள், அனுமதிக்கப்பட்ட தனியார் இரத்தவங்கிகன் மற்றும் மருந்துக் கடைகளை நேரடியாக ஆய்வுசெய்து உரிமம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இரத்த வங்கிகளுக்கு 3 ஆண்டுக்குஒருமுறை உரிமம் புதுப்பித்தல் செய்ய வேண்டும். அங்குள்ளகுறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே உரிமம் வழங்க வேண்டும் என்பது விதிமுறை என கூறப்படுகிறது. விருதுநகரில் உள்ள மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இங்குள்ள அதிகாரிகள் முறையாக அரசு இரத்த வங்கிகளை ஆய்வு செய்யவில்லை. இதனால் இதுபோன்ற தவறுகள் நடைபெற்றுள்ளது எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரத்த வங்கியின் பொறுப்பாளராக இரத்த வங்கியைப் பற்றி பயிற்சி பெற்ற பணியில் உள்ள மருத்துவர் இருத்தல்வேண்டும்.
பயிற்சி பெற்ற செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவல்லுனர், 2 ஆய்வக உதவியாளர்கள் ஆகியோர் பணியில்இருத்தல் வேண்டும். முழுக்க, முழுக்க குளிரூட்டப்பட்ட அறையில் இரத்த வங்கி இருத்தல் வேண்டும் என்பது விதிமுறையாகும்.
பயிற்சி பெற்ற மருத்துவரின் சான்றிதழை சமர்பித்தபின்பே, இரத்த வங்கியின் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
ஆனால், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்களே, இரத்தங்களை பகுப்பாய்வு செய்தல், சுத்திகரிப்பு செய்தல், பாதுகாப்பது, இரத்த வகை கண்டறிதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு முறையான பயிற்சி உள்ளதா என்பதுகேள்விக்குறியே. மேலும் குறைவான ஊதியத்தில், அனுபவமற்ற புதிய ஊழியர்களை தனியார் நிறுவனம் நியமனம்செய்துள்ளதால் இது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.
ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு இரத்தம் வெளிமார்க்கெட்டில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஒரு மருத்துவர் மற்றும் ஊழியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழக அரசு, உடனடியாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவனங்களை ரத்து செய்வதோடு, பயிற்சி பெற்ற நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும்.






