தமிழர் பகுதியை நோக்கி மைத்திரி அவசர உத்தரவு!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இவ்வாறு அவசர உத்தரவு விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிப்பதால் வடக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக 9 பிரதேச செயலகங்களில் 2,788 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட 2,788 குடும்பங்கள் குடும்பங்களைச் சேர்ந்த 9161 பேரில் 5775 பேர் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் மாங்குளம் பிரதேசத்தில் ஒரு குளம் உடைப்பெடுத்துள்ளதால் ஏ-9 பாதையில் போக்குவரத்துத் தடைப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான இரணைமடு குளம் உள்ளிட்ட பல குளங்கள் தற்போது நிரம்பி வழிந்தோடுகிறது.

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36 அடிகள் வரை உயர்ந்திருப்பதால் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புளியம்பொக்கணை, ஊரியான், தர்மபுரம் கிழக்கு, தர்மபுரம் மேற்கு மற்றும் கண்டாவளை கிராமங்களை சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.