இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகாமல் இருக்க வாரி இறைக்கப்பட்ட பணம்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள எவரெடி மில்லில் பணியாற்றி வந்த பெண் தொழிலாளி மர்மமாக மரணமடைந்துள்ளார்.

உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள கொரட்டாங்குறிச்சி ஊரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் விஜயலட்சுமி. 19 வயதான இவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

மிகவும் ஆபத்தான நிலையில் மில்லில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விஜயலட்சுமியை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விஜயலட்சுமியின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்து விஜயலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மில் நிர்வாகம் புரோக்கர் மூலம் விஜயலட்சுமியின் பெற்றோரை சமாதானப்படுத்தி பணம் கொடுத்துள்ளனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகாமல் இருக்க மில் நிர்வாகம் பணத்தை வாரி இறைத்ததாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகளில் தொடர்ந்து பெண் தொழிலாளர்களின் மரணம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையம் உள்ளிட்ட பல ஆணையங்கள் இருந்தும் இந்த மில் நிர்வாகங்கள் மீதும், மாவட்ட நிர்வாகத்தின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையான ஒன்று என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.