உளுந்தூர்பேட்டை வட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அப்பாவிப் பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் காவல்துறை முழு விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் ஒட்டனந்தல் ஊராட்சியில் 28.1.17 அன்று ஆராயி என்ற பெண்ணும், அதற்குபின் எல்லம்மாள் என்ற பெண்ணும், 22.10.18 அன்று பாபு என்பவரின் மனைவி வாலாம்பாள் என்பவரும், 23.11.18 அன்று முருகன் என்பவரின் மனைவி கமலம் என்பவரும் காதிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தனர்.
இவர்களின் மரணம் சற்றேறக்குறைய ஒரே மாதிரியாக நிகழ்ந்துள்ளது. மேலும் அடுத்த நாளே (24.11.18) அசோக் என்பவர் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.
இந்நிலையில் இம்மாதம் 8ஆம் தேதி இரவுசுமார் 11.30 மணியளவில் அரிகிருஷ்ணன் என்பவரின் மனைவி ஆரியமாலாவை கொலை செய்ய முயன்றும், பாலியல் வன் கொடுமைக்கும் உள்ளாக்க முயற்சிக்கப் பட்டு அவர் கூச்சலிட்டதால் குற்றவாளி தப்பி ஓடியுள்ளான்.
உறவினர்களால் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆரியமாலா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் கவிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
இதன் தொடர்ச்சியாக நவம்பர் 23ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்த கமலத்தின் உறவினர் ஜி.கோதண்டபாணி ஊரில் விசாரித்தபோது கமலத்தின் நகையை கவிதாஸ் நவம்பர் 23 அன்றே அடகு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
எனவே இத்தொடர் மரணங்களை குறிப்பிட்டு மேற்படி எதிரி கவிதாஸ்தான் இம்மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்றும், உரிய விசாரணை நடத்திடக்கோரியும் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்தில் கோதண்ட பாணி புகார் அளித்தபோது காவல் நிலையத்தில் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.
இத்தொடர் கொலைகளோடு இப்பகுதி கிராமப்புறங்களில் ஏற்கனவே பல பெண்கள் கொலை செய்யப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள நிலை தொடர்கிறது.
இதில் திருவெண்ணெய்நல் லூர் காவல்துறையினரின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. எனவே இறந்த கமலத்தின் உடலை உடற்கூறாய்வு செய்வதும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும் இப்பகுதியில் சமூகப்பதட்டம் உருவாவதை தடுக்கும்.
எனவே மாவட்ட காவல்துறை இச்சம்பவங்களின் மீது உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.