சிறிசேன உடனடியாக பதவி விலகவேண்டும்- குமார வெல்கம

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதவி விலக வேண்டும் என   ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம ஐலன்ட் நாளிதழிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி  அரசமைப்பினை மீறியுள்ளார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள குமாரவெல்கம அரசமைப்பிற்கு எதிராக செயற்பட்டவர் ஒரு போதும் பதவியிலிருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அரசியல்குற்றவியல் பிரேரணை மூலம் எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் எனவும் குமாரவெல்கம குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பை மீறி செயற்பட்ட நபர் தொடர்ந்தும் பதவி வகிப்பதால் மேலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பது சிறிசேனவிற்கு தெரிந்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவராக பதவி வகிப்பதற்கான சட்டபூர்வதன்மையை இழந்த ஒருவர் நாட்டிற்கு தலைமை வகிக்கும் சந்தர்ப்பத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் சிரமப்படுவார்கள் எனவும் குமாரவெல்கம தெரிவித்துள்ளார்.

சிறிசேன தனது பதவியிலிருந்து விலகி அரசமைப்பு அடுத்த கட்டத்தை தீர்மானிப்பதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிசேன தொடர்ந்தும் பதவியில் நீடித்தால் நிலைமை மோசமடையும் எனவும் தெரிவித்துள்ள குமாரவெல்கம இலங்கைக்கு சர்வதேச அளவிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முதிர்ந்த அரசியல்வாதி என்ற வகையில்  இந்த பாதிப்புகள் குறித்து ஜனாதிபதிக்கு தெரிந்திருக்கவேண்டும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத  ஜனாதிபதி வேறு எதனையும் மதிக்கமாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.