பெங்களூரு பார்ப்பன சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுடன் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார்.
சசிகலாவை சந்திக்க சென்ற தினகரனுடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தங்க.தமிழ்ச்செல்வன், கோதண்டபாணி, கதிர்காமு, உமா மேஸ்வரி, பார்த்திபன், ஏழுமலை உள்ளிட்ட 12 பேர் சென்றிருந்தனர். சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அமமுகவில் தற்போது யாரும் அதிருப்தியில் இருப்பது போல் தெரியவில்லை. அதனால் எங்கள் கட்சியில் இருந்து யாரும் அதிமுகவிற்கு போவார்கள் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார். சிலர் கட்சியில் இருந்து விலகி விடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்காட்சிகள் அஞ்சுகிறது. இதனை வைத்தே நாங்கள் குறுகிய காலத்தில் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம் என்பதைத் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் வருகின்ற 20 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு மரண அடி கொடுப்போம் என தினகரன் சூளுரைத்துள்ளார். நிச்சயமாக மரண அடி கிடைக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசிய தினகரன், எதற்கும் துணிந்தவனால் எதனையும் சாதிக்க முடியும். மத்திய அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சவில்லை. நான் அந்த அச்சுறுத்தல்கள், அழுத்தங்களை எதிர்கொள்வேன் என தினகரன் கூறியுள்ளார்.
ஏற்கனவே எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அப்பீல் செய்யமாட்டோம் என்று தினகரன் அறிவித்து இருந்த நிலையில், இந்த முடிவில் மாற்றம் ஏற்படும் என தெரிகிறது. இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து சசிகலாவிடம் தினகரனும், மற்றவர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் நடந்தால் அதில் திமுகவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும் அல்லது இடைத்தேர்தல் நடக்காத வகையில் மேல்முறையீடு செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவும் தினகரன் தரப்பு தயாராகி வருவதாக தெரிகிறது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் 40 தொகுதிகளையும் நாங்களே வெல்வோம், நாங்கள் கூட்டணி வைப்பதை மக்கள் விரும்பவில்லை. அதனால் எந்த தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.