கோவையில் குடும்ப தகராறு காரணமாக, தனது இரு மகள்களை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தந்தை தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராணி. இவரது கணவர் பத்பநாபன். இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15) ஸ்ரீஜா (10) இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவருக்குமிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்த நிலையில், நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து நிலையில், விரைந்து வந்த போலீசார், இருவரிடமும் பேசி, சமரசம் செய்து வைத்தனர். ஆனால், செல்வராணி கோபித்துக்கொண்டு, வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
மேலும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து செல்ல முயன்றபோது, குழந்தைகள் என்னுடனே இருக்கட்டும் என்று கூறிய பத்பநாபன், செல்வராணியை மட்டும் அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். அதனால் செல்வராணியின் இரு குழந்தைகளும் கணவர் வீட்டிலேயே தங்கிவிட்ட நிலையில், இன்று காலை குழந்தைகளை பார்க்க கணவர் வீட்டுக்கு வந்த செல்வராணி, இரண்டு பெண் குழந்தைகளும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பத்மநாபனே தனது இருமகள்களையும், கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகள்களை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






