இளம் தாயிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய Mall நிர்வாகம்!

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவது வீட்டு வேலை என பெண்ணை அவமதித்த மால் நிர்வாகம் அப்பெண்ணிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது!

கொல்கத்தா மால் ஒன்றில் பணியாற்றும் நிர்வாகி ஒருவர் ‘தாய்ப்பால் வழங்குவது எல்லாம் வீட்டு வேலை’ என பெண் ஒருவரை அவமதித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், மால் நிர்வாகம் அப்பெண்ணிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ‘சவுத் சிட்டி மால்’ வளாகத்தில் தாய்ப்பால் கொடுப்பதற்காக தனி அறையும் குழந்தைகளுக்கான தனிக் கழிப்பறையும் நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையடுத்து, இவரது கோரிக்கைக்கு பதில் கொடுத்த மால் நிர்வாகி ஒருவர், “தாய்ப்பால் வழங்குவதற்கு எல்லாம் அறை இல்லை என்பதெல்லாம் ஒரு குறையா? இது ஷாப்பிங் மால். இங்கு ஷாப்பிங் செய்வதற்கு மட்டுமே இடமுண்டு. அதனால் உங்களது வீட்டு வேலைகளை எல்லாம் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்காக எல்லாம் மற்றவர்களின் தனியுரிமையை பாதிக்கச் செய்யும் வகையில் நாங்கள் செயல்பட முடியாது” என தெரிவித்துள்ளார்.


நிர்வாகியின் கருத்தால் கோபமடைந்த அப்பெண் சமூக வலைதளங்களில் சவுத் சிட்டி மால் நிர்வாகி அளித்த பதிலை பதிவேற்ற, மால் நிர்வாகத்துக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ளது. இதையடுத்து, மால் நிர்வாகம் அப்பெண்ணிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மால் நிர்வாக ஏஜெண்ட் ஒருவர்தான் விதிமுறை அறியாமல் தவறாகப் பேசிவிட்டதாகவும் குழந்தைகளுக்கு மற்றும் தாய்மார்களுக்கு என தனி அறைகள் ஒதுக்கப்படும் என்றும் சவுத் சிட்டி மால் நிர்வாகம் அறிவித்துள்ளது.