தயவு செய்து கருணை கொண்டு., உடனே முடிவு எடுங்கள்.! நடிகர் விஜய் சேதுபதி உருக்கமான வேண்டுகோள்.!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் கடந்த செப்டம்பர் மதம் 9 ஆம் தேதி, முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது,” பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு, தமிழக அமைச்சரவை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 7 பேர் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு பரிந்துரைத்து, எழுத்துபூர்வமாக ஆளுநரிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனையடுத்து, 7 பேர் விடுதலையில் அரசியலமைப்பு சட்டப்படி சரியான முடிவு எடுக்கப்படும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக சட்டம், நிர்வாகம், அரசியலமைப்புப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் ஆளுநர் மாளிகை தெரிவித்து இருந்தது. ஆனால் இதுவரை தமிழக ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்திவருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில், ”இது தமிழர்களின் உணர்வு சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல, மனித உரிமை சமந்தப்பட்டது. கருணை வையுங்கள் மரியாதைக்குரிய ஆளுநர் அவர்களே, தயவு செய்து தற்போதே செயல்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அதாவது, கருணை உள்ளம் கொண்டு 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் #28YearsEnoughGovernor என்ற ஹாஸ் டேக் ட்வீட்டர் பக்கத்தில் ட்ரண்ட் ஆகி வருகிறது.