ராஜஸ்தான் மாநிலம் பிதாவாஸ் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிந்து தேவி. இவருக்கு 6 வயதில் சிறுமியாக இருக்கும்போது குழந்தை திருமணம் செய்து விட்டார்கள். தற்போது அவர் 18 வயது பெண்ணாகியுள்ளார். அந்த திருமணம் அவளுக்கு விவரம் அறியா வயதில் செய்யப்பட்ட விருப்பமில்லா திருமணம். இந்நிலையில், அந்த பெண் இதிலிருந்து விடுபட ஜோத்புர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அப்பெண்ணை குடும்பத்தினர் மற்றும் உறவினர் மிரட்டியுள்ளனர். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு சாரதி டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் உதவி செய்தது. நீண்ட நாட்களாக நடந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த புரட்சிகரமான தீர்ப்பை எழுதிய நீதிபதி பி.கே.ஜெயின் குழந்தை திருமணம் என்பது கடுமையான குற்றம் என்று கூறினார்.
இதனையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் அனைவரும் எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர். பின்னர் இந்த எதிர்ப்பை தொடர்ந்து உடனே இந்த திருமணம் செல்லாது என தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக, பேட்டியளித்த அந்த பெண், ‘குழந்தை திருமணம் என்ற பிடியிலிருந்து நான் முற்றிலும் விடுதலை பெற்றுவிட்டேன். இனிமேல் நான் என் விருப்பம்போல் படிப்பை தொடங்குவேன்’ என கூறினார். அந்த பெண்ணிற்கு உதவி செய்த தொண்டு நிறுவனம் கூறுகையில், பிந்து தேவியின் சிறந்த முயற்சிக்கு அவருக்கு ஒரு சிறந்த மறுவாழ்வை பெற்று தந்துள்ளதாக தெரிவித்துள்ளது.








