சற்று முன்னர் நீதிமன்றில் சரணடைந்த ரவீந்திர விஜேகுணரட்ன…..!

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன சற்றுமுன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக நீதிமன்ற வளாகத்திற்கு சென்றுள்ளார்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ரவீந்திர விஜேகுணரட்னவை, வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று அழைப்பு விடுத்திருந்தனர்.

எனினும், அவர் விசாரணைக்கு வரவில்லை. இந்த நிலையில் “விசாரணைக்கு வருமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு தனக்கு அதிகாரபூர்வமாக அழைப்பாணை விடுக்கவில்லை” என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருப்பதாக, நாளிதழ்களில் பார்த்தே தெரிந்து கொண்டேன். எனினும், நான் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவேன் என்று தெரிவித்துள்ளார்.அதற்கமைய சற்றுமுன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக நீதிமன்ற வளாகத்திற்கு சென்றுள்ளார்.

இதற்கு முன்னரும் அவரைக் கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது நீதிமன்றத்தில் சரணடைவதற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.