பாஜக யுவ மோர்சா தலைவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர் என நடிகையும், பாஜக பிரமுகருமான நடிகை காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் மது அருந்திவிட்டு வாகனத்தை ஒட்டியதாகவும் இதனால் காவல்துறையினரிடம் பிடிபட்டு அபராதம் செலுத்தியதாகவும் நடிகையும், தமிழக பா.ஜ.க. பிரமுகரான காயத்ரி ரகுராம், மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். இந்நிலையில், இவர் மீது தொடர்ந்து புகார் வருவதால் அவர் பாஜகவில் இருந்து நீக்கப்படுவார் என்று ஒரு தகவல் வெளியான நிலையில், காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
இதனையடுத்து தமிழிசையின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
தனது பதிவில் காயத்ரி ரகுராம் கூறியதாவது:
‘அன்புள்ள தமிழிசை மேடம் பாஜக ஒரு தேசியக் கட்சி. நான் பாஜகவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி வாயிலாக மட்டுமே. நீங்களாகவே யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது. நான் நரேந்திர மோடிக்காகவே பா.ஜ.கவில் இருக்கிறேனே தவிர மற்ற உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு உறுப்பினர்களை சேர்க்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் கிடையாது. நீங்கள் தமிழக பாஜகவின் தலைவர் மட்டும்தான். நீங்களே எல்லா விசயங்களையும் நிர்ணயித்துவிட முடியாது. தமிழக பாஜகவில் இருந்து கொண்டு பிரச்சினைகளை சந்திப்பதைவிட அதிலிருந்து நான் விலகியே இருக்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார்.
மேலும் மது போதையில் கார் ஓட்டியதாக கூறப்பட்ட சம்பம் குறித்து பதிவிட்டடிருந்த அவர் அன்று காவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சையில் நான் உண்மையை விளக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், யாரும் கேட்கத் தயாராக இல்லை. அன்று நான் தான் காரை ஓட்டிச் சென்றேன். காவலர் ஒருவர் என்னை இறக்கிவிட்டார் என்று சொல்வது பொய். நான் தேவைப்பட்டால் ரத்த பரிசோதனைக்குக்கூட தயார் என்றே கூறியிருந்தேன்’ என்று கூறியிருக்கிறார்.