குடாநாட்டில் மீண்டும் வீதிகளில் களமிறக்கப்பட்ட சிறிலங்கா இராணுவம்….

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் ரோந்துப் பணிகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர். நேற்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர், கால்நடையாகலும், மிதிவண்டிகளிலும், ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, யாழ். நகரப் பகுதி, நல்லூர், வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளில், சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று வீதி ரோந்து நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தனர்.

அதைவிட, சிறிலங்கா காவல்துறையினரின் ரோந்து மற்றும், சோதனைக் கெடுபிடிகளும் நேற்று யாழ். குடாநாட்டில் அதிகரித்திருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள், நேற்று கொண்டாடப்பட்ட நிலையிலும், இன்று மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையிலும், தமிழ் மக்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே சிறிலங்கா இராணுவம் வீதிகளில் இறக்கி விடப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு, சிறிலங்கா காவல்துறையினரிடமே உள்ளது என்றும், அவர்கள் உதவி கோரினால் மாத்திரமே இராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அண்மையில் கூறியிருந்தார்.

சிறிலங்கா காவல்துறையின் கோரிக்கைக்கு அமையவே, சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று முதல் மீண்டும் வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், சிறிலங்கா காவல்துறையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.