ரணில் ஊழல்பேர்வழி- விசாரணை செய்ய ஆணைக்குழு- கண்ணீர்விட்டழுதார் சிறிசேன

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை  மீண்டும் ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிகாரப்போட்டியை தீவிரப்படுத்தியுள்ளார்

வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

ரணில்விக்கிரமசிங்க மோசமான ஊழல்பேர்வழி எனவும் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சிக்கு பெரும்பான்மையிருந்தால் கூட அவர்களை ரணில் விக்கிரமசிங்கவை என்முன்னால் நிறுத்தவேண்டாம் நான் அவரை பிரதமராக்க மாட்டேன் என ஐக்கியதேசிய கட்சியினரிடம் தெரிவித்துள்ளேன் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

எனது வாழ்நாளில் அவரை பிரதமராக நியமிக்கப்போவதில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.

2015ற்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைகுழுவொன்றை அமைக்கப்போவதாக சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் ஊழல்மிகுந்தவர்,அவரது பொருளாதார கொள்கைகள் உள்ளுர் தொழில்துறைக்கு பொருத்தமானவையில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.

எங்கள் கலாச்சாரத்திற்கு பொருத்தமில்லாத தீவிரதாரளமயவாத கொள்கையை ரணில் விக்கிரமசிங்க நடைமுறைப்படுத்த முயன்றார் எனவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலில் தோல்வியடைந்தவேளை ரணில் விக்கிரமசிங்கவை  பதவிவிலகுமாறு எவ்வாறு மன்றாடினேன் என விபரித்துள்ள சிறிசேன செய்தியாளர்கள் மத்தியில் கண்ணீர் சிந்தியுள்ளார்.

அவரது பொருளாதார கொள்கைகள் காரணமாகவே நாங்கள் தேர்தலில் தோற்றோம் என அவரிற்கு தெரிவித்தேன்,இந்த அறையில் வைத்து அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டேன் அவர் அதனை ஏற்க மறுத்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் 100 தடவைக்களிற்கு மேல் வெளிப்படையாக மோதியிருப்போம் எங்கள் மத்தியிலான அதிகாரப்போட்டி குறித்து அமைச்சரவை வெளிப்படையாக அறிந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்டவர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவேண்டும் என்ற பாரம்பரியமுள்ளது என தெரிவித்துள்ள சிறிசேன என்னால் ரணிலுடன் இணைந்து பணியாற்ற முடியாது ஐக்கியதேசிய கட்சி வேறு எவரையாவது நியமிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.