சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான ஐ.தே.க. குழுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டிய அவசியம் தமக்கில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும், இதனாலேயே தாம் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற அமர்வுகளின் இடைநடுவே ஆளுந்தரப்பு வெளியேறிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சபாநாயகர் என்பவர் பக்கசார்பின்றி சுயாதீனமாக செயற்பட வேண்டும். ஆனால், தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய ஐ.தே.க.வின் சபாநாயகராக செயற்பட்டு வருகிறார்.
அது மாத்திரமின்றி, நாடாளுமன்றில் ஐ.தே.க. குழுக்கூட்டத்தை சபாநாயகர் நடத்தி வருகிறார். அவ்வாறாக ஐ.தே.க.வின் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் எமக்கில்லை.
சபாநாயகர் நடுநிலையாக செயற்படும் வரை நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கவே தீர்மானித்துள்ளோம். அது மாத்திரமின்றி சபாநாயகர் பக்கசார்பின்றி செயற்படும் பட்சத்தில் நாம் பெரும்பான்மையை நிரூபிப்போம்.
இன்றைய தினம் நாம் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு மோதலில் ஏற்படுவோம் எனவே அவர்கள் எண்ணியிருந்திருப்பர். ஆனால், அவ்வாறானதொரு குழப்ப சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கு நாம் தயாரில்லை” எனவும் குறிப்பிட்டார்.






