நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பநிலையில் பல தரப்பட்ட சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் அவரின் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
ஆனால் அதை தோல்வியடைய செய்ய தேவையான பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ச பக்கம் இல்லை.
அதன் காரணமாக தொடர்ந்தும் பாராளுமன்ற அமர்வுகள் ஒழுங்காக நடைபெறாதவாறு மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் குழப்பம் விளைவித்து வருகின்றனர்.
மறுபுறம் , மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை ஆதரவை நிருபிக்கும் வரை தானே இந்த நாட்டின் பிரதமர் என கூறிவரும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய அலரி மாளிகையை தனது கட்டுப்பாட்டில் இன்னமும் வைத்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கையில் இரண்டு பிரதமர் என்னும் நிலை காணப்படுகிறது. அதேவேளை சர்வதேச தரப்புகள் ரணிலின் பக்கமே நியாயமுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமரை நியமித்தமை அரசியல் அமைப்பை மீறும் செயல் எனவும் கருதி வருகின்றன.
இதன் அடிப்படையில் , இலங்கையில் ஜனநாயக பண்புகளை பாதுகாக்கும் படியாக அரசின் மீதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும் தொடர் அழுத்தங்களை சர்வதேச நாடுகள் பிரயோகித்து வருகின்றன.
இந்த அழுத்தங்கள் காரணமாக மஹிந்த தரப்பு தொடர்ச்சியாக சர்வதேசம் மீது குற்றம் சுமத்தி வருகின்றது. பதவி நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சபாநாயகர் கருஜெயசூரியவும் சர்வதேச நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக அவர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் , இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வரும் வெளிநாட்டுத் தூதுவர்களை நாட்டை விட்டும் வெளியேற்றிவிட வேண்டும் என திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டப் பீட பீடாதிபதி ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் பிரச்சனைகளில் வெளிநாட்டுத் தூதுவர்கள் தலையிடவோ, வெளிநாட்டுச் சட்டங்களுக்கு இந்நாட்டை உட்படுத்தவோ தேவையில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் முற்று முழுதாக சர்வதேச உதவிகளில் தங்கி இருக்கும் இலங்கை இவ்வாறன மிரட்டல்களை விடுப்பது மேலும் சர்வதேச நிலைப்பாட்டில் இறுக்கத்தை கொண்டு வரலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.