ரெயில் ஓடி கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் தவறி விழுந்த 1 வயது குழந்தை!! (அதிர்ச்சி வீடியோ)

உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த சோனூ என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஜான்சிக்கு செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

அவரது 2-வது குழந்தையின் பெயர் ஷிபா. அவளுக்கு ஒரு வயது ஆகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து டெல்லி செல்லும் ரெயில் மதுராவுக்கு வந்தது. அதில் ஏறி அவர்கள் அமர்ந்திருந்தனர்.

சோனூ ரெயிலில் ஏறியபோது யாரோ அவரது மணிபர்சை திருடி சென்று விட்டனர். ரெயிலில் அமர்ந்த பிறகு தான் அதை பார்த்தார்.

எனவே ரெயிலில் இருந்து இறங்கிவிட முடிவு செய்தார். மனைவி குழந்தைகளை இறங்கும்படி அழைத்துவந்தார். அதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டது. உடனே அவசரமாக இறங்கினார்கள்.

2-வது குழந்தை ஷிபாவை அவளது தாயார் தோளில் தூக்கி வைத்திருந்தார். அவசரமாக ரெயிலில் இருந்து இறங்கியதால் குழந்தை அவரது தோளில் இருந்து தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. அதற்குள் ரெயில் வேமாக புறப்பட்டு சென்றது.

கீழே விழுந்த குழந்தை தண்டவாளத்தின் கம்பிக்கும், பிளாட்பார சுவருக்கும் இடையே படுத்த நிலையில் கிடந்தது.

ரெயில் அதை கடந்து சென்றது. இவ்வாறு 4 பெட்டிகள் கடந்து சென்றன. அதுவரை குழந்தை தலையையோ, கை கால்களையோ தூக்காமல் புத்திசாலித்தனமாக படுத்திருந்தது.

இதனால் ரெயிலில் அந்த குழந்தை அடிபடவில்லை. ரெயில் கடந்து சென்றபோது எந்த நேரத்திலும் குழந்தை உயிர் போகலாம் என்று பெற்றோர்களும், அங்கு நின்று கொண்டிருந்தவர்களும் பதறிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை. ரெயில் கடந்து சென்றதும், வாலிபர் ஒருவர் ஓடிச்சென்று குழந்தை எடுத்து தாயிடம் கொடுத்தார்.

குழந்தையை உயிருடன் பார்த்ததும் தாயும் அங்கு கூடியிருந்த பெண்களும் ஒரு பக்கம் ஆனந்தம் இருந்தாலும் அதிர்ச்சியோடு கதறி அழுதனர்.

குழந்தையின் உடலில் ஒரு சிராய்ப்பு காயம் கூட இல்லாமல் தப்பியது மிகவும் அதிசயமாக பார்க்கப்பட்டது. கடவுளின் அருளால்தான் குழந்தை பிழைத்துக் கொண்டதாக அங்கிருந்தவர்கள் பேசினார்கள்.

பிளாட்பாரத்தில் இருந்த பெரும்பாலானோர் குழந்தையை தொட்டு ஆசீர்வதித்து விட்டு சென்றனர்.

குழந்தையின் தந்தை சோனூ கூறும்போது, நாங்கள் ரெயிலை விட்டு இறங்க முயன்றபோது ரெயில் புறப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஏராளமானோர் ரெயிலில் ஏறினார்கள்.

அவர்களில் ஒருவர் எனது மனைவியின் தோளில் இருந்த குழந்தையை தள்ளிவிட்டு விட்டார். அதனால் குழந்தை கீழே விழுந்தது என்று கூறினார்.

சம்பவத்தை நேரில் பார்த்த அசீப்கான் என்பவர் கூறும்போது, நான் நாக்பூருக்கு செல்வதற்காக ரெயிலுக்கு காத்திருந்தேன்.

அந்த நேரத்தில் தான்குழந்தை தவறி விழுந்தது. குழந்தை உயிர் பிழைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

ரெயில் சென்ற பிறகு பார்த்த போது சிறு காயம் கூட இல்லாமல் அழுதபடி குழந்தை தண்டவாளத்தில் கிடந்தது என்றுகூறினார்.