இந்தியாவில் திருமணமாகும் நேரத்தில் மணமகனை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட நிலையில், அந்த காயத்துடனேயே மணப்பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
புதுடெல்லியை சேர்ந்தவர் படல் (25). இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்தது.
திருமணம் நடைபெறும் இடத்துக்கு அருகில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்தன. நிகழ்ச்சி முடிவுக்கு வந்த பின்னர் திருமணம் நடக்கவிருந்தது.
அப்போது அங்குள்ளவர்கள் ஆடிபாடி மகிழ்ச்சியாக இருந்தபோது இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் வந்தனர்.
பின்னர் மணமகன் படல் தோள்பட்டையை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அவர்கள் அங்கிருந்து தப்பினர்.
இதன் பின்னர் கீழே சுருண்டு விழுந்த படலை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு காயத்துக்கு கட்டுபோடப்பட்டது.
பின்னர் 3 மணி நேரம் கழித்து மீண்டும் திருமணம் நடைபெறும் இடத்துக்கு படல் வந்த நிலையில் அவருக்கு திருமணம் நடைபெற்றது.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
இதனிடையில் முன்னர் ஒரு கொலை முயற்சி வழக்கில் மணமகன் படல் ஈடுபட்டது தெரியவந்துள்ள நிலையில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.