அதிமுக ஆட்சியின் அராஜகம்! உணவின்றி தவிக்கும் மக்கள் மீது பாய்ந்த சட்டம்!

வங்க கடலில் உருவான கஜா புயல் கடந்த 5 நாட்களாக தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வந்து நேற்று முன் தினம் காலையில் நாகை அருகே வேதாரண்யத்தில் கரையை கடந்தது. அப்போது நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தை 111 கி.மீ வேகத்தில் புயல் தாக்கியது. கஜா புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

கஜா புயலுக்கு 45 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 1.70 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டது. மேலும், 347 டிரான்ஸ்பர்மர்கள், 39,938 மின் கம்பங்கள், 3559 கி.மீ நீள மின் வடங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலுக்கு முன்பே 2,49,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். புயல் காரணாமாக 56,942 குடிசை வீடுகளுக்கும், 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு பெருமளவில் சேதத்தை எற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு வேளாண்மை உதவி அலுவலர்கள் 2 பேர் கொத்தமங்கலம் பகுதியில் சேத மதிப்பை கணக்கிட சென்றுள்ளனர். அப்போது அவர்களை கிராம மக்கள், சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த டி.ஆர்.ஓ. ராமசாமி, ஆர்.டி.ஓ. டெய்சி குமார், தாசில்தார் ரத்தின குமாரி ஆகியோர் டி.எஸ்.பி. அய்யனார் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புடன் நேற்றிரவு சேதம் பற்றி கணக்கெடுக்க ஆலங்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர்.

இதனிடையே அங்கு நின்ற தாசில்தார், டி.எஸ்.பி., காவல் துறையினர் வந்த 4 கார்களுக்கு விவசாயிகள், கிராம மக்கள் தீ வைத்தனர். இதில் கார்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. இதைத்தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்பு தீயிட்டு எரித்த வழக்கில், கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 50 பேர் கைது செய்துள்ளனர்.