பாடகி சின்மயியை தமிழ் திரைப்பட டப்பிங் யூனியனில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 96 திரைப்படமே தமது கடைசி தமிழ் திரைப்படம் எனவும் சின்மயி அறிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக சந்தா கட்டணத்தை சின்மயி செலுத்தவில்லை எனவும் இதனாலையே யூனியனில் இருந்து அவரை நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்மயி பணியாற்றியுள்ள திரைப்படங்களில் அவருக்கான ஊதியத்தில் இருந்து யூனியன் நிதியாக 10 சதவிகிதத்தை பெற்று வந்தததாகவும் சின்மயி வெளிப்படுத்தியுள்ளார்.
டப்பிங் யூனியனில் உறுப்பினர்கள் அல்லாதவரை தமிழ் திரைப்படத்துறை பணியாற்ற அனுமதிப்பது இல்லை எனவும்,
ஆனால் இந்த சந்தா விவகாரம் தொடர்பில் இதுவரை யூனியனில் இருந்து தமக்கு எவ்வித தகவல் பரிமாற்றவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன், அடுத்து எந்த துறை தம்மை நீக்குவார்கள் என தெரியவில்லை என அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக தாம் டப்பிங் பணியாற்றியது 96 படம் என்றும், ஒரு நல்ல படத்துடன் குறித்த துறையில் இருந்து விடைபெறுவது மன நிறைவை தருவதாகவும் சின்மயி குறிப்பிட்டுள்ளார்.






