நாளை புயலால் பாதிக்கப்பட்ட இடத்தை நேரடியாக பார்வையிட இருக்கிறார் முக ஸ்டாலின்.
காற்றழத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 11 ஆம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டது. கடந்த 5 நாட்களாக தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வந்த கஜா புயலானது, இன்று கரையை கடந்தது. இந்த நிலையில் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தை 111 கி.மீ வேகத்தில் தாக்கி,தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.
புயல் காரணமாக உள்மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கஜா புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்தாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் 4500 பெரிய மரங்களும், 7 ஆயிரம் சிறிய மரங்களும் வேரோடு சாய்ந்துவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் பாதித்த 7 மாவட்டங்களில் 12000 மின்கம்பங்கள், 102 துணை மின் நிலையங்கள், 500 கி.மீ. மின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் உத்தரவு பேரில், போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில்,கஜா புயல் பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். மேலும் புயல் பாதிப்புகளில் இருந்து விடுபட மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் நாளை புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இருக்கிறார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களை ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.
புயல் பாதிப்பில் உள்ள தமிழக மக்களுக்குத் தேவையான உணவு – குடிநீர் – மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்க சீருடையணியாத ராணுவத்தினர் போல கழகத்தினர் செயல்பட வேண்டும் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.









