நம் உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு(நீர் குத்து) ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். தினசரி குறைந்தபட்சம் 3 லிட்டர் வரைக்கும் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும்.
தினமும் தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது.
நம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். வியர்வை அதிகமாக வெளியேறினால் கூட நீர் சத்து குறைந்து சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும்.
அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர், சிறியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டாலே, உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, சிறுநீர் தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும்.






