நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக சுமந்திரன் வழக்கு!

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

19வது திருத்த சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் இப்போது நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். உடனடியாக யாரும் நீதிமன்றத்தை நாடக்கூடாது என்பதற்காகவே வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்.

இதனால் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தப்படுகிறது எனவும் நான் மட்டுமல்ல இன்னும் பல சட்டத்தரணிகளும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். நாளை மறுநாள் திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தை நாடுவேன் என சுமந்திரன் தெரவித்தார்.

முன்னதாக,நாட்டில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையை தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ள நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமை மேலும் பிரச்சினைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.