திரிசங்கு நிலைமையில் ராஜபக்சவினரின் திடீர் முடிவு!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்களை உள்ளடக்க வேண்டாம் எனவும் ராஜபக்ச குடும்பத்தினரின் புகைப்படங்களை மட்டும் உள்ளடக்குமாறும் அந்த முன்னணியின் ஆதரவாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அமைய மகிந்த மற்றும் மைத்திரியின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தீர்மானத்திற்கு அமைய மகிந்த ராஜக்ச, பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் புகைப்படங்களை உள்ளடக்கிய சுவரொட்டிகளை நாடு முழுவதும் ஒட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பணத்தை கொடுத்து திரட்ட முடியாத சூழ்நிலையில், ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக ராஜபக்சவினருக்கு கிடைத்துள்ள நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புகைப்படங்கள் அடங்கிய பெரிய பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிலும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி செல்லும் விதமான எந்த சந்தர்ப்பமும் ராஜபக்சவினருக்கு வழங்கப்பட கூடாது என மைத்திரி தரப்பு தீர்மானித்துள்ளதாகவும் இதற்கு அமையவே ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வழங்காது ராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கியிருப்பதாகவும் பேசப்படுகிறது.