ஓ.பி.எஸ். மகன் பேசிய கூட்டத்தில் கலைந்து சென்ற மக்கள்…!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், வைகை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில், அதிமுக-வின் 47-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசும் போது, “தினகரனும், தங்க தமிழ் செல்வனும் ஜாதி அரசியல் நடத்துகின்றனர். அதனால், அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள், திரும்பி வர வேண்டும், என்று பேசினார்.

இந்தக் கூட்டத்திற்கு, கட்சிக்காரர்கள், பொது மக்களை அழைத்து வந்து அமர வைத்திருந்தனர். அப்படி இருந்தும், சொற்ப நபர்களே, அமர்ந்திருந்தார்கள். இந்த நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன், ரவீந்திரநாத் குமார், பேசத் துவங்கிய போது, உட்கார்ந்திருந்த சொற்ப ஆட்களும் கலையத் துவங்கினர்.

கட்சிக்காரர்கள், அவர்களை அழைத்து வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், கலைந்து சென்றவர்கள் யாரும், திரும்ப வரவில்லை. இதனால், கூட்டத்தின் மேடை முன்பாக போடப்பட்ட சேர்கள் காலியாகத் தான் இருந்தன.

இதனால், அதிமுக தலைமை கழகப் பேச்சாளர், நுார்ஜஹான், அவசரமாக, தனது உரையை முடித்தார். கூட்டம் கலைந்து சென்றதைக் கண்டு, துணை முதல்வரின் மகன் உட்பட கட்சிக்காரர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.