தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும்.
அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து தில்லி நாடாளுமன்றத்தை நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் முற்றுகையிட உள்ளோம்.
இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரம் விவசாயிகள் செல்ல உள்ளோம். விவசாய பொருட்களுக்கு லாபம் இல்லை, போதிய அளவு மழை பொழியவில்லை.
இந்த சூழ்நிலையில் விவசாயிகளின் டிராக்டர்,நிலம், நகை ஆகியவற்றை ஏலம் விடுவதை கைவிடவேண்டும்.
காவிரி- குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவதோடு, தமிழகத்தில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு தற்கொலை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.