தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.44.30 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி ஜெயந்த் முரளியின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 24 அரசு அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 3 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட 24 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். திடீரென மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதால், அரசு அதிகாரிகளிடம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
கடந்த 4 நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடந்த சோதனை நடத்தினர். அந்த அதிர்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று மதியம் 12.10 மணிக்கு கோவையில் உள்ள மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் சோதனை நடைபெற்றது.
அப்போது, இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஈரோட்டை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு (51) என்பவரது அறையிலும் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து அவரிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் அதிர்ச்சி அடைந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.