திருமணம் நிச்சயம் முடிந்து 4 நாட்களில் பள்ளி ஆசிரியை கொலை!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் பகுதியில் ஹோட்டல் நடத்திவருபவர் குமரவேல். இவரது மகள் வசந்தப்ரியா கும்பகோணம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை காவிரி ஆற்றின் அருகே வசந்தபிரியா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வசந்தபிரியாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட ஆசிரியை வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28-ஆம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின்னரும் வழக்கம்போல் வசந்தபிரியா பள்ளிக்கு வேலைக்கு சென்று வந்தபோது கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கொலை நடந்த இடத்தில் இரண்டு செல்போன்கள், பேனா கத்தி ஆகியவை கிடந்தது. அவற்றை திருவிடைமருதூர் போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.