மீண்டும் ரணில் பிரதமரானால்.. ஒரு மணித்தியாலம் கூட ஜனாதிபதி பதவியில் இருக்க மாட்டேன்!

ரணில் விக்ரமசிங்க மீளவும் பிரதமராக பதவி வகித்தால் ஒரு மணித்தியாலமேனும் ஜனாதிபதி பதவியில் நீடிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி மிகவும் கடுமையான ஓர் நடவடிக்கையை எடுத்திருந்தேன்.

இன்று நாடு எடுத்துள்ள நடவடிக்கை அதனை விடவும் வலுவானது. நாட்டையும் நாட்டு மக்களையும் கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுத்துள்ளேன்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் ஒருவர் அரசியல் சாசனத்தை காண்பித்து ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்குமாறு கோரியிருந்தார்.

அரசியல் சாசனத்தின் குறிப்பிட்ட சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமருக்கும் வழங்குமாறும் கோரியிருந்தார்.

இது தொடர்பிலான ஆவணமொன்றில் கையொப்பமிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பிரதமராக நியமிக்க முடியும் என்ற போதிலும் எனது அதிகாரங்களை பிரதமரிடம் வழங்க முடியாது என நான் எழுத்து மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியப்படுத்தியிருந்தேன்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவே செயற்பட்டார் எனவும் தாம் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கடமையாற்றியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையை நீடிக்க விடக்கூடாது என்ற காரணத்தினால் மகிந்த ராஜபக்சவை நான் பிரதமராக நியமித்தேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.