நாளை வெடிக்கிறது போராட்டம்! முடங்கும் தமிழகம்!!

சத்துணவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 25-ந்தேதி முதல், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் சத்துணவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதை தொடர்ந்து 6ஆம் நாளான இன்றும் ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது.

காலமுறை ஊதியம் வழங்குதல், குடும்பப் பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு பணியாளர்களுடன் இன்று மதியம் அமைச்சர் சரோஜா பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், நாளை சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தால், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், 43 ஆயிரம் மையங்களில், மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சத்துணவு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.