ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்!. கைது செய்யப்பட்ட ஆசிரியருக்காக மாணவ மாணவிகள் போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள கண்ணக்குருக்கை என்ற கிராமத்தில், மேல்நாச்சியார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் கண்ணன்.

இப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பள்ளியின் ஆசிரியர் கண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தகுமாரிடம் பெற்றோர் புகார் செய்தனர்.

அவர்கள் அளித்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விசாரிக்க நேற்று முன்தினம் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்களுடன் பள்ளிக்கு வந்தனர். அப்போது தலைமை ஆசிரியருக்கும், அவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் அவர்கள் அனைவரும் பள்ளிக்குள் புகுந்தனர்.

வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த கணித ஆசிரியரை கிராம மக்கள் வகுப்பறைக்கு சென்று சரம்வாரியாக தாக்கியுள்ளனர். இதனால் ஆசிரியருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. ஆசிரியர் அடிவாங்குவதை பார்த்து வகுப்பறைக்குள் இருந்த மாணவ மாணவிகள் கதறி அழுதுள்ளனர்.

இதனையடுத்து ஆசிரியர் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.மேலும் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய மேல்நாச்சிப்பட்டை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆசிரியர் கண்ணனுக்கு ஆதரவாக அவரை விடுதலை செய்யக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்பை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர் கண்ணனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும், தாக்கியதை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.