நாங்கள் ஆட்சி புரிவதால்தான் தினமும் மழை வெளுத்து வாங்குகிறது.! அதிமுக அமைச்சர் பளீச்.!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக அரசின் 47 வது துவக்கவிழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது.,

தந்தை பெரியார்., அறிஞர் அண்ணா., புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் வழியில் வந்த அதிமுக அரசானது தற்போது எவரும் எதிர்பார்க்காத வகையில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முயற்சியில்தான் தமிழகத்தில் சத்துணவுக்கூடம்., ஏழைஎளிய மக்களுக்கு இலவச வேட்டிசேலை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

அவர்களுக்கு அடுத்தபடியாக ஆட்சி புரிந்த தலைவி ஜெயலலிதாவின் முயற்சியிலேயே தொட்டில் குழந்தைத்திட்டம்., மாணவ – மாணவியருக்கு இலவச மிதிவண்டி., காலனி மற்றும் மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை கொண்டுவந்தார்.

அவர் மறைவிற்கு பின்னர் நமது விவசாயிகளின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு அதனை செயல்படுத்தியும் வருகின்றனர். அதிமுகவில் உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை இந்த கட்சியை யாரும் ஆட்டவோ அசைக்கவோ இயலாது.

திமுகவின் குடும்ப அரசியலைப்போல இருக்காமல் அதிமுகவில் கடைக்கோடி தொண்டனும் நல்ல பதவி வகிக்கலாம் என்ற கொள்கை மற்றும் கோட்பாடுகளை கொண்ட ஒரே கட்சியாக திகழ்கிறது நமது அதிமுக கட்சி. மேலும் மின்வெட்டை கண்டுபிடித்த அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் திரு.வீரசாமியை போல இருக்காமல்., சீர்மிகு ஆட்சியால் தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக திகழ்கிறது தமிழகம்.

தமிழ்நாட்டில் அதிமுக கட்சியின் நல்லாட்சி நடைபெறுவதாலேயே தமிழகத்தில் தினமும் மழை பெய்து விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பல்வேறு மாற்றுத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு அதன் மூலமாக சுமார் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவியருக்கு சிறந்த சீருடைகள் வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் கோபி புறவழி சாலை., அத்தாணி முதல் சத்தியமங்கலம் சாலை., ஈரோடு முதல் நீலகிரி சாலை மற்றும் கோபிசெட்டிபாளையம் முதல் பெருமாநல்லூர் சாலைகள் 4 வழிச் சாலைகளாக மற்றம் செய்யப்பட உள்ளது என்று தனது உரையில் கூறினார்.