பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் கொல்லப்பட்டார் என்பதை சவுதி அரேபியா அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.
சவுதி மன்னர், சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதி வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி (வயது 59). இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2 ம் தேதி சென்ற அவரை அதன் பிறகு காணவில்லை. அவர் அந்த தூதரகத்துக்குள்ளேயே சவுதி அரேபிய அரசால் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதை சவுதி அரேபிய அரசு மறுத்து வந்தது.
ஆனால், வெளிநாட்டு ஊடகங்கள் பல, அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று உறுதியாக தெரிவித்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மாயமானது தொடர்பாக சவுதி மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக துருக்கி காவல் அதிகாரிகளும் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் அவரை சவுதி அரசு பிடித்து வைத்திருப்பதாக கருதி, அவரை விடுவிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தின் முன் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், 2 வாரங்களுக்குப் பிறகு அவர் கொல்லப்பட்டார் என்பதை சவுதி அரேபியா அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இது குறித்து சவுதி அரசு, “இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் கஷோகிக்கும் அங்குள்ள அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நடந்த மோதலில் அவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சவுதி அரேபியாவை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 மூத்த தூதரக அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்துவருகிறது” என்று சவுதி அரேபியாவின் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதற்கு சவுதி அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.