ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கீழச்செல்வனூர் காவல் நிலையம் அருகே இராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கிச்சென்ற அரசு பேருந்து மீது சிவகாசியிலிருந்து மாயாகுளம் வந்து கொண்டிருந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து கீழச்செல்வனூர் போலீசார் நடத்திய விசாரனையில், கீழக்கரை அருகேயுள்ள மாயாகுளத்தைச்சேர்ந்த 7 பேர் சிவகாசி சென்று தீபாவளி பட்டாசு வாங்கிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் அதிகாலை 3.40 மணிக்கு டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் சதீஷ், உமைய பாலா, விஜய்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
மேலும் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக கீழக்கரை அனுப்பி வைத்தனர். பலியானவர்கள் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் நடந்த விபத்தால் 3 பேர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.