லண்டன் ரயில் நிலையத்தில் ‘பாம்’ வைத்திருப்பதாக கூச்சலிட்ட மாணவிக்கு 12 மாதங்கள் இளைஞர்கள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படுமாறு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வடமேற்கு லண்டனின் ப்ரெண்ட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதியன்று தன்னுடைய தோழியுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
அப்போது சக தோழியின் சவாலை ஏற்ற அந்த மாணவி, ரயில் புறப்பட்டதும் பையில் பாம் வைத்திருப்பதாக கூறி கத்தியுள்ளார்.
இதனால் பதறிப்போன பயணிகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுமிகள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சவாலுக்காக இருவரும் புரளியை கிளப்பியிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சிறுமிக்கு 12 மாதங்கள் இளைஞர்கள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படுமாறும், சவால் விடுத்த மற்றொரு மாணவி 8 மாதங்கள் அனுமதிக்கப்படுமாறும் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.