திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் 7 பேரை புறநகர் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து காவலர்கள் மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இப்ராஹிம், சுபியன், உசேன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் விசாரித்ததில் செவந்தம்பாளையம் சாமத்தோட்டம் லலிதா என்பவரது வீட்டில் சிலர் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போல்ஸ் மெண்டேல் , ரோனி, சித்திக் அலி, காஜ் உள்ளிட்ட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள், பங்களாதேஷ் நாட்டில் இருந்து ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்கு நுழைந்து போலியான முகவரியில் ஆதார் கார்டு எடுத்துள்ளனர்.
மேலும் திருப்பூர் மாவட்டம் செவந்தம்பாளையம் பகுதியில் தங்கி, அதேபகுதியில் உள்ள பனியன் கம்பெனிகளில் சில மாதங்களுக்கு வேலை செய்து வந்துள்ளனர்.
இவர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே 7 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி யாரேனும் தங்கியுள்ளார்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






