கடனைச் செலுத்தியும், ஆவணங்களைத் தராத வங்கிக்கு, நுகர்வோர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு….!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் கொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் தனபால். இவர் கோழிப் பண்ணை வைப்பதற்காக, திண்டுக்கல்லில் உள்ள தேசிய வங்கி ஒன்றில், 2 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். இவர் கடன் வாங்கிய பிறகு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால், அவரால், தவணைத் தொகையை சரிவர செலுத்த இயலவில்லை.
இருந்தாலும், பின்னர், வட்டியுடன் சேர்ந்து, 2,05,354 ரூபாய் செலுத்த வேண்டும், என்று வங்கி அறிவித்தது. தனபால், இந்தத் தொகையை, இரண்டு தவணைகளில் செலுத்தி விட்டார்.
அதனால், தனபால், கடன் பெற்றதற்கான சான்று மற்றும், அடமானம் வைத்த ஆவணங்களை, வங்கியிடம் திருப்பிக் கேட்டார். ஆனால், வங்கியோ, அவரது ஆவணங்களைத் தராமல் இழுத்தடித்தது. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான, தனபால், திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நுகர்வோர் நீதி மன்றத் தலைவர் ஜெயசங்கரன் தலைமையில், நடைபெற்றது.
அப்போது, வங்கி, உடனடியாக தனபாலின் ஆவணங்களைத் திருப்பித் தர வேண்டும் என்றும், அவரது மன உளைச்சலுக்காக 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், வழக்குச் செலவிற்கான தொகை 3 ஆயிரம் சேர்த்து, 23 ஆயிரம் ரூபாயை, தனபாலுக்கு தாமதம் இல்லாமல் செலுத்த வேண்டும், என்று உத்தரவிட்டது.






