புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவரின் 20 வயது நிரம்பிய மனைவி அனுசுயா, கடந்த 2ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை அனுசியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின்னர், இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து மருத்துவர்கள், அனுசுயாவின் குடும்பத்தினரிடம் கூறுகையில், குழந்தை இறந்து தான் பிறந்தது. அனுசியாவின் உடல் மோசமாக இருப்பதால் கர்ப்ப பையை அகற்றினால் தான் அனுசியா உயிர் பிழைப்பார் எனவும் உறவினர்களிடம் தெரிவித்ததாக கூறுகின்றனர்.
இதனை தொடர்ந்து அனுசியாவிற்கு சிகிச்சை அளித்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் அனுசியாவும், குழந்தையும் இறந்ததாகவும், மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், இங்கு சிகிச்சைக்கு வரும் பலர் இறக்கின்றனர் எனக்கூறி அனுசியாவின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனையடுத்து அங்கு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்திருந்த போலீசார், அனுசியாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருடனும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.







