அமமுக அமைப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், ”கடந்த ஒரு வாரத்திற்கு முன் தினகரன் நண்பரிடம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக பேச நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டதாகவும் அதேபோல கடந்த வருடம் ஜூலை மாதம் 12ம் தேதி கோட்டூர்புரம் இல்லத்தில் தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாகவும்” ஆதாரங்களை வெளியிட்டு தமிழக அரசியலை அதிர வைத்தார்.
இந்த விஷயம் குறித்து இன்று காலை மதுரை விமானநிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் அளித்த அவர், ”அவரது பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை, எனவே இதற்கான பதிலை சென்னைக்கு சென்ற பிறகு பத்திரிகையாளர்களிடம் விரிவாக பேசுகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர், ”2017 ஜூலை 12ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி, அவரை சந்தித்தேன் என்றும், அப்போது அவர் என்னிடம், தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் கூறினார்” என்று பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.