என்னென்ன பலன்கள் எந்தெந்த கடவுளை வழிபட்டால் கிடைக்கும்?

அனைத்து விதமான தோஷங்களுக்கும் விரத வழிபாடுகள் உள்ளன. எந்த தோஷத்திற்கு எந்த விரதத்தை கடைப்பிடித்து பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய் பகவான். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.

வாக்குவன்மை, பண்பு, கணிதம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப் புலமை தருவது, எழுத்தாற்றல், கவிபாடும் திறன் ஆகியவற்றைத் தருபவர் புதன் பகவான். புதன் நமது ஜாதகத்தில் தோஷமாக இருந்தால் கல்வித்தடை ஏற்படும். புதன்கிழமை விரதமிருந்து ஏதேனும் ஒரு கோவிலில் தீபமேற்றி வழிபடுவது, படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், புத்தகம், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்குவது போன்றவற்றால் புதன் தோஷம் நீங்கி கல்வியறிவு மேம்படும்.

திருமணம், குழந்தைப்பேறு இரண்டும் நம் வாழ்வின் மிக முக்கியமான திருப்பங்கள் ஆகும். அவற்றை நமக்குத் தருபவர் வியாழன்(குரு) பகவான். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் தீபமேற்றி வழிபடுவதுடன், பெரியவர்கள், துறவிகள், மகான்கள், சாதுக்கள் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவதாலும் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்.

கலையுணர்ச்சி, அழகுணர்ச்சி, காதல், போகம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். வாழ்க்கை நமக்குத் தரும் சுகங்களை மன திருப்தியோடு அனுபவிக்க சுக்கிரனின் அருள் வேண்டும். திருமால் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதுடன் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றை செய்வதால் சுக்கிரன் தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

நீண்ட ஆயுளையும், நல்ல செல்வத்தையும் வாரி வழங்குபவர் சனீஸ்வரர். நவகிரகங்களில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுடன், தினந்தோறும் காக்கைக்கு உணவு வைப்பதும் சனீஸ்வரரால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கும்.

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் நன்மை பெறலாம்.

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.