பல்கலைகழக மாணவிகளை பேராசிரியர் பாலியல் வதைக்குள்ளாக்கினாரா???

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் புரிந்த பேராசிரியர்கள் தொடர்ந்து கடமையிலிருக்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படவில்லை என யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்கள்.

யாழ் பல்கலைகழக மாணவர்களாலும், ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் மாணவிகள் மீது பாலியல் வதைகளும், அத்துமீறல்களும் பல்கலைகழகத்திற்குள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த மோசமான செயலை செய்தவர்கள் தப்பிச்செல்லும் நிலைமையே உள்ளது.

பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த பேராசிரியர் மீது பல முன்னரும் இப்படியான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் இப்படியானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால“ இந்த இழிவான செயற்பாடுகள் தொடர்கிறது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோருகிறோம். பல்கலைகழக நிர்வாகம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைகழக பேரவை என்பவற்றிற்கும் இது தொடர்பாக தெரியப்படுத்தினோம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவதால், அந்த பேராசிரியர் தப்பிச்செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது என மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.