மீண்டும் ரோட்டுக்கு வந்த எஸ்.பி.கே நிறுவனம்..!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளஅனைத்து முக்கியச் சாலைகளையும் 5 வருட காலம் பராமரிப்பு செய் திட பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசு தனியாரிடம் ஒப்பந் தம் விட்டுள்ளது.

சமீபத்தில் வருமான வரி சோதனையில் சிக்கி, கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 100 கிலோ தங்கம் மற்றும் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்ட நிறுவனமான எஸ்.பி.கேவிடம் பராமரிப்பு பணிகள் விடப்பட்டுள்ளன.

இதையடுத்து, கடந்த மாதம்,விருதுநகரில் உள்ள 4 வழிச் சாலைமேம்பாலம் அருகில் இருந்து எம்.ஜி.ஆர். சிலை வரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இப்பகுதியில் ஏற்கனவே இருந்தசாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டது. அங்கிருந்த தார் சாலை அகற்றப்பட்டு, புதிய தார் சாலை அமைக்கப் படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், முறைப்படி பணிகள் நடைபெறவில்லையென பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால், அங்கு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. உயரமான வாகனங்கள் தெருக்களுக்குள் வருவதால், மின்சார வயர்கள் அடிக்கடிதுண்டிக்கப்படுகின்றன.

மேலும்,60 அடி சாலையின் இருபுறத்தில் உள்ள ஏராளமான மரங்களில் வாகனங்கள் உரசி அதன் கிளைகள் நாள்தோறும் உடைகின்றன.

சிலதினங்களுக்கு முன்பு இரவு மின் கம்பத்தில் கனரகவாகனம் ஒன்று மோதியது. இதையடுத்து, மின் கம்பம் சேதமாகி மின்சாரமும் தடை பட்டது.

பின்பு,மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊழியர்கள் வந்து சரி செய்தனர். எம்.ஜி.ஆர். சிலை முதல் சிவகாசிசாலை மேம்பாலம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரமே இருக்கும். இன்னும் சாலைப் பணி நிறைவடையவில்லை.

கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் அல்லல்பட்டு வருகின்றனர். எஸ்.பி.கே நிறுவனத்திற்கு ஒருகிலோ மீட்டர் சாலை அமைக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது என்றால் மாவட்டம் முழுவதும் உள்ள சாலையை இந்நிறுவனத்தால் எப்படி பராமரிக்க முடியும்?

எனவே, தமிழக அரசின் தனியார் சாலை பராமரிப்பு திட்டமானது தோல்வியிலேயே முடியும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில்,

சாலைப் பணியை 5 தொழிலாளர்களை வைத்து தான் செய்கின்றனர். சாலையை மட்டப்படுத்தும் இயந்திரத்தை வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் இயக்கிவந்தார்.

அவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. வேறு தொழிலாளியை வைத்து இயந்திரத்தை இயக்கினர். தற்போது அந்த இயந்திரம் பழுதாகியதால் 3 நாட்களாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மிகவும் மந்த கதியில் வேலை நடக்கிறது. இதனால் பலருக்கு வியாபாரம் இல்லை. இப்பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

பள்ளி விடுமுறை முடியும் முன்பாவது புதிய தார் சாலை போடுவார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்தார். எ

னவே, மாவட்ட நிர்வாகமானது, நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து தோண்டப்பட்ட சாலையை உடனே புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்